தலைமை ஆசிரியரின் உத்தரவாதத்தை ஏற்று சென்னை பள்ளி மாணவிகளின் போராட்டம் வாபஸ்

311 0

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததை ஏற்று போராட்டம் முடிவுக்கு வந்தது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மகாலிங்கபுரம் சாலையில் இன்று பிற்பகல் அரசுப்பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், மாணவிகளின் போராட்டம் தீவிரமடையவே, காவல்துறை துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் கலைந்து சென்ற மாணவிகள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை பிடித்துச் சென்ற 3 மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதி மொழி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டம் நடத்திய மாணவிகளில் சிலரை பள்ளி தலைமை ஆசிரியர் அடித்ததாகவும், போராட்டத்தில் பங்கேற்றவர்களை பள்ளியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டினர். மாணவிகளின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மாணவிகளை பள்ளி வளாகத்திற்குள் வரும்படி பள்ளி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக போராட்டம் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், மாணவிகள் அமைதியாக பள்ளி வளாகத்திற்குள் செல்லும்படி வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் சென்று போராட்டதை தொடங்கினர். தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தலைமை ஆசிரியர் வந்து உத்தரவாதம் அளித்தால்தான் போராட்டத்தை திரும்ப பெறுவோம் என்று மாணவிகள் கூறினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். மேலும், போராடும் மாணவிகள் நிச்சயமாக காலாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தையும் அவர் அளித்தார். போலீசாரும் அவர்களுக்கு பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Leave a comment