அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த தமது ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட கருத்து வெளியிடப்படுவதாக தெரிவித்து, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கமொன்றை வழங்கியுள்ளது.
கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாக இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால வரைபோடு சேர்த்துக்கொள்ளப்பட உள்ள கட்சிகளின் நிலைப்பாடு குறித்த அறிக்கைகள் அடங்கிய ஆவணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் இந்த ஆவணம் நேரில் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர், அடுத்த நாளே, குறித்த ஆவணம் அரசியலமைப்பு வழிநடத்தல்குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ஆவணம் கையளிக்கப்பட்ட காலம் தொடர்பில் வெளிவரும் மாறுபட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.