மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 200 பேரளவில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
8.1 ரிச்டர் அளவிலான நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு காரணமாக மெக்ஸிக்கோ, குவாட்டமாலா, எல்சல்வடோர், கொஸ்டரிக்கா, நிக்கரேகுவா, பனாமா மற்றும் ஒன்டோருஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி கடற்சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வுகள் தொடரலாம் என அச்சம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், கரையோர பகுதி வாழ் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கரீபியன் தீவுகளில் வீசும் ஏர்மா சூறாவளியால் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சூறாவளி கரிபியன் தீவுகளான ஹெய்ட்டி, டர்க்ஸ் மற்றும் காய்கோஸ் ஆகியவற்றை அண்மித்துள்ளதாகவும், சூறாவளியின் காரணமாக இந்த தீவுகளில் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகளை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 270 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வீசும் இந்த சூறாவளி, ஃப்ளோரிடாவைத் தாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.