தே.மு.தி.க, தலைவா விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தே.மு.தி.க கூட்டணி அமைத்து 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.
தேர்தல் முடிவுக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் பலர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க, தி.மு.க வில் சேர்ந்தனர். மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் விலகி சென்றதால் கட்சியை பலப்படுத்த விஜயகாந்த் தீவிர நடவடிக்கை மேற் கொண்டார்.
கட்சியில் இருந்து யாரும் விலக வேண்டாம். உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறி மற்ற நிர்வாகிகளை தக்க வைத்துள்ளார்.இது போல மகளிர் அணியில் இருந்தும் யாரும் வெளியேற வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பிரேமலதா கூறிவருகிறார்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சவாலாக சந்திக்க வேண்டிய நிலை தே.மு.தி.க வுக்கு ஏற்பட்டுள்ளது.சட்ட சபை தேர்தலில் 2.5 சதவீதம் ஓட்டுகள் வாங்கிய தே.மு.தி.கவின் சரிவை நிலைநிறுத்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
தேர்தல் முடிவுக்கு பிறகு விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன் ஆகியோர் ஒரு முறை சந்தித்து பேசினார்கள்.
அதன் பின்னர் விஜயகாந்தை சந்திக்க முடியவில்லை. மக்கள் நலக் கூட்டணி – தே.மு.தி.க ஒன்றாக சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தவர் எல்.கே.சுதிஷ். அவரையும் இதுவரை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திக்கவில்லை.
ஆனாலும் தேர்தலுக்கு பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா வெளியேறியதாக அறிவித்தது.
இது போல தே.மு.தி.க இது வரை அறிவிக்கவில்லை. இது குறித்து ஒருமுறை பிரேமலதா கருத்து கூறிய போது கூட கூட்டணியை மறுக்கவில்லை. எதிரான கருத்துக்களையும் கூறவில்லை.
அதனால் மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் எந்த முடிவு எடுத்தாலும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணியடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மத சார்பற்ற சக்திகளை இணைப்பது என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இது மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் சந்திக்கும் என்று திருமாவளவன் கூறி வருகிறார்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சிகள் வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் என்ற பேச்சு இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலை இவர்கள் ஒருங்கிணைந்து சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
தே.மு.தி.கவை பொறுத்தவரை விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வேலைகள் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. வருகிற 25-ந் தேதி அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளில் நிர்வாகிகளை விஜயகாந்த் உற்சாகப்படுத்துகிறார்.
மக்கள்நலக் கூட்டணியுடன் சேர்ந்து தே.மு.தி.க தேர்தலை சந்திக்குமா? தொண்டர்களின் விருப்பப்படி தனித்து நிற்குமா? என்பது செப்டம்பர் முதல் வாரத்தில் தெரிய வரும்.
உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்பதை விஜயகாந்தும், பிரேமலதாவும் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.