சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

308 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மண்சரிவு, வெள்ளம், கடும் காற்று ஆகிய அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் தொடர்ந்தும் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியில் ஏழு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு, வெள்ளம், கடுமையான காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் ஆகிய அனர்த்தத்தினால் இதுவரையான ஒருவாரக்காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்தி 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

கம்பஹா, காலி, இரத்தினபுரி,கேகாலை,வவுனியா,குருணாகலை,பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்வோரே குறித்த அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்கு வீடுகள் முற்றாகவும் 360 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

வெள்ளம், மண்சரிவு, கடுமையான காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான 13 பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் மழை தொடருவதால் பாதுகப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

வெள்ளம் ஏற்பட்ட வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலைக்கானப்படுகின்றது. இதனால் இரத்தினபுரி, காலி, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களின் பிரதேச செயலகபிரிவுகள் ஊடாக தற்போது படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.

மேலும் பாதிக்கப்பட்டுள்ளோர்களுக்கு அவசர உபகரணம், மருத்துவ உதவிகள் என்பனவை அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிப்பேற்படும் பகுதிகளில் மக்களுக்கு விரைந்து உதவிகளை வழங்குவதற்கும் பொலிஸார், இராணுவம், விமானப்படை போன்றவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக கடும் மழையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதால் நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்ததுள்ளதுடன் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் கானப்பட்டதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment