இரசாயனப் பதார்த்தங்கள் உள்ள பழங்கள் கம்பஹாவில் விற்கத் தடை

281 0
நாட்டில் விற்பனையாகும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பழ வகைகளில் நச்சுத்தன்மை மற்றும் இரசாயணப் பதார்த்தங்கள் அடங்கிய மூலப் பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்திலுள்ள பழக்கடைகளிலும் தற்போது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பழக்கடைகளில் விசேடமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பப்பாசி, அண்ணாசி, வாழை மற்றும் உள்ளூர் திராட்சை ஆகிய பழ வகைகளில், மனித நலனுக்கு பொருத்தமற்ற நச்சுப் பதார்த்தங்கள் உள்ளனவா என்பது தொடர்பில், தற்போது விசேட அவதானம் எடுக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு வகையான பழங்கள் தொடர்பில், கம்பஹா பிரதேச மக்களை மிக அவதானமாக இருக்குமாறும், குறித்த பழங்களில் ஏதாவது வித்தியாசம் தென்பட்டால், அருகிலுள்ள சுகாதாரப் பணிமனைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் கம்பஹா சுகாதாரப் பணிப்பாளர்கள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறான பழ வகைகளின் சாம்பல்களை எடுக்கும் நடவடிக்கைகள், கம்பஹா மாவட்ட உணவு மற்றும் ஒளடதங்கள் பரிசோதகர்களான ஏ.ஜே.எம். நியாஸ், விக்கிரமசேகர பண்டார ஆகியோரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

Leave a comment