மியன்மாரிலிருந்து மலேஷியவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 59 ஆயிரம் அகதிகள் மலேஷியாவில் பதிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தொகையைவிட இரு மடங்கானவர்கள் மலேஷியா வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகதிகளாக வந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மியான்மாரில் பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 400 பேர் பலியாகினர்.
இதுதவிர அண்டைய நாடான பங்களாதேஷிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக அளவிலான முஸ்லிம்களை கொண்டுள்ள மலேஷியா, தற்போது ஒரு லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு தற்காலிக இடவசதிகளை செய்துகொடுத்துள்ளது
ஐக்கிய நாடுகள் அகதிகள் சாசனத்தில் மலேஷியா இதுவரை கைச்சாத்திடாத நிலையில், ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை சட்டவிரோத குடியேறிகளாகவே கணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.