நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை பொதுக்கூட்டம் தொடங்கியது.
நீட் தேர்வுக்கு எதிராக இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொதுக்கூட்ட திடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்து, அதற்கான நோட்டீசை காவல்துறை அளித்தது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கூறும்போது, உச்ச நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு தடை போடவில்லை. அதனால் பொதுக்கூட்டம் நடைபெறும், என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மேடைக்கு வந்து சேர்ந்ததும் பொதுக்கூட்டம் தொடங்கியது.