நீட் தேர்வை எதிர்த்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

352 0

நீட் தேர்வை எதிர்த்து நாளை சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், மாணவர்கள், சமுதாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

‘நீட்’ தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் நாளை (9-ந்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

மாணவர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பொன்.ராஜா தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்,

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள், மாணவரணியினர் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரிமுனையில் இருந்து துறைமுகம் வரை கொடி- தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நாளை சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அறிவித்துள்ளார்.

நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் இனியும் போராட்டங்கள் நடைபெறாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ள நிலையில் திருச்சியில் இன்று மாலை நடைபெறும் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தடை விதித்துள்ளார்.

இதன் எதிரொலியாக சென்னையிலும் நீட்டுக்கு எதிராக போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.

இதன் காரணமாக டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a comment