நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு மத்திய-மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன நிலையில், தி.மு.க. தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 8-ம் தேதி (இன்று) திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சியில் தி.மு.க. தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது. கூட்டம் நடத்துவது உச்ச நீதிமன்ற தடைக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளுக்கு மாநகர காவல்துறை நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பினால், தி.மு.க. நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.