பஸ் நடத்துனர்கள் மிகுதிப் பணம் வழங்காவிட்டால் முறையிட இலக்கம் அறிமுகம்

251 0

மேல் மாகாணத்திற்கு உட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான சம்பவங்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் உடனடியாக பயணிகள் முறைப்பாடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.

இதுதொடர்பாக கூடிய கவனம் எடுத்து, பயணிகளுக்கு மிகச் சிறந்த போக்குவரத்துச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தனியார் பஸ் நடத்துனர்கள், பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்குவதில்லை என்றும், டிக்கட் வழங்கினாலும் சில நடத்துனர்கள் மீதி சில்லறைக் காசுகளை சரியாக வழங்குவதில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில்லறைக் காசுகளைக் கேட்டால், அவதூறாக தூற்றி முகத்தில் வீசி எறிந்து விடுவதாகவும், இதனால் பயணிகள் பெரும் இன்னல்களுக்கும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் நடத்துனர்கள் தொடர்பிலோ அல்லது தனியார் பஸ்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, இது குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அதிகார சபையின் 011-555 95 95 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளுக்கும் கட்டாயம் பயணச் சீட்டு மற்றும் மிகுதிப் பணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு வழங்கப்படாதவிடத்து, அது சட்டத்தில் பாரிய குற்றம் என்பதுடன், தண்டனை வழங்கப்படுவதற்கான அதிகாரம், அதிகார சபைக்கு இருப்பதாகவும் சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment