நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, எவராவது மனக்குறைகளை முன்வைக்கும் போது அரசாங்கம் பூரண பங்களிப்பை வழங்கி அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அரச கொள்கைக்கமைய பிரதேச ரீதியில் அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூரணப்படுத்தி நகர பாடசாலைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் பிரபல பாடசாலைகளுக்கான போட்டியை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் கல்வித்துறையில் நிலவும் வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். ஆரம்ப கற்றல் வள நிலையத்தை ஜனாதிபதி, திறந்து வைத்து, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பிரதேச மக்களுடன் நட்பாக உரையாடியதுடன் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மரநடுகையும் இடம்பெற்றது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண சபை உறுப்பினர்களான ஹேரத் பண்டா, சம்பத் ஸ்ரீ நிசாந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிபர் சனத் விஜேசிங்க, ஆசிரியர்கள், பெற்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஓனேகம ஆரம்ப சுகாதார நிலையத்தின் நினைவு பலகையை திறந்து வைத்து, முதலாவது நோயாளியை பதிவு செய்து மக்களிடம் ஒப்படைத்தார். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.