இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசியம் என்றும் மத்தியில் பகிரப்பட்ட அதிகாரத்தை மீளப்பெறாத வகையில் இரண்டாம் தர சபையாக மாகாண பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய செனட் சபை அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு இடைக்கால பின்னிணைப்பு முன்மொழிவினை
தமிழ் தேசியக்கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.
அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வழிநடத்தல் குழு உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சளாருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த பின்னிணைப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்த விடயம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள பின்னிணைப்பு முன்மொழிவின் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வு அவசியமாகும். மத்தியில் பகிரப்படும் அதிகாரம் மீளப்பெறப்படாதவகையில் மாகாண பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய வகையில் இரண்டாம் தர சபையாக செனட் சபை அமைக்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத்தின் மீயுயர் தன்மை பாதிக்கப்படாதவகையில் அரசியல் அமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும். சமயம் சம்பந்தமாக சமத்துவமான நிலைமை பேணப்படவேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விடயங்களை உள்ளடக்கி இடைக்கால வரைபு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நியாயத்தன்மை பேணப்பட்டால் அந்த வரைபை கூட்டமைப்பு சாதகமாக பரிசீலிக்கும் என்றும் இந்தப் பின்னிணைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அரசியல்யாப்பு சபையின் வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் 20, 21, 22 ஆகிய தினங்களில் கூடவுள்ளது. 21 ஆம்திகதி அரசியல் யாப்புக்கான பின்னிணைப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.