கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை செம்மணிப் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் கிருஷாந்தியுடன் கொலைசெய்யப்பட்ட கிருஸ்ணகுமார் என்பவரின் மனைவி பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சுடர் ஏற்றியதை தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், எஸ்.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பாடசாலை மாணவர்கள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும், 63 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை கிருஷாந்தியுடன் கொலையுண்ட அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தியின் மனைவி அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
1996ம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ்.சுண்டிக்குளி மாணவி கிருஷாந்தி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது நாவற்குழியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரால் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அயலவர் கொடுத்த தகவல் அடிப்படையில் கிருசாந்தியை தேடிச் சென்ற அவரது தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரன் குமாரசாமி பிரணவன், மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
கிருஷாந்தி மற்றும் அவரது தாய், சகோதரன், உறவினர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ஸ உட்பட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சோமரத்தின ராஜபக்ஸவிற்கு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சோமரட்த்தின ராஜபக்ஸ கொடுத்த தகவலின் அடிப்படையில் செம்மணிப்பகுதியில் இருந்து 15 மனித எச்சங்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.