வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆண்டபோதும் வடக்கு மாகாணத்திற்கு அபிவிருத்திகள் எதனையும் பெரிதாக செய்து விடவில்லை என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார்.
சுன்னாகம் ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியமின் திருவுருவ சிலையினை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆண்டபோது, மலையகப் பகுதிகளிலும் தெற்கிலும் பல அபிவிருத்திகளை செய்தார்கள். வீதிகளை அமைத்தார்கள், தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள், தேயிலை, இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். ஆனால் இங்கு எதனையும் செய்யவில்லை.
அதேபோன்று தற்போது இங்கு இருப்பவர்களும் எதனையும் செய்யவில்லை. சீமெந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்கவில்லை, பால் தொழிற்சாலைகள் மற்றும் எத்தனையோ தொழிற்சாலைகளை மீள உருவாக்கவில்லை. அதனை உருவாக்கி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவும் இல்லை.
இலங்கை வரலாற்றில் கல்வியில் முன்னிலையில் இருந்த வடக்கு மாகாணம் இன்று பின்னோக்கி நிற்பதற்கான காரணங்களை நாம் அனைவரும் ஒன்றாக தேடிப்பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வெளிச்சம் இன்றி, கட்டிடங்கள் இன்றி, நல்ல ஏனைய வசதிகள் இன்றி நல்ல பேறுகளை பெற்று கல்வியில் உயர்ந்து, உயர் பதவிகளில் இடம்பிடித்த தமிழ் மக்கள் இன்று கல்வியில் பின்தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். உங்கள் அனைவரினதும் விடுதலை கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. கல்வியில் உயர்வடைந்தால் மட்டுமே பல சாதனைகளை நிறைவேற்ற முடியும் என்றார்.