இலங்கையின் எப்பாகத்திலும் எந்த தடுப்பு முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லை என்பதனை முப்படைத் தளபதிகள் மூலம் உறுதி செய்துள்ளேன் என காணாமல்போன உறவுகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கையை விரித்தார்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 200 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கடந்த வாரம் இறுதியில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வடக்கின் மாவட்ட அரச அதிபர்களிற்கு மிகவும் இரகசியமான முறையிலான அறிவித்தலின் சகல மாவட்டங்களில் இருந்தும் தலா நான்குபேரை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவித்தலின் பிரகாரம் மொத்தம் 23பேர் நேற்றைய ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே ஜனாதிபதி காணாமல் போனோரின் உறவுகளிடம் இவ்வாறு தெரிவித்து கைவிரித்ததாக ஜனாதிபதியை சந்தித்த உறவுகள் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
எமது உறவுகளை தொலைத்தும் பையில் ஒப்படைத்து விட்டும் இவ்வளவு காலமாக காத்திருக்கின்றோம். அவ்வாறு காத்திருந்த எமக்கு கடந்த ஆட்சியில் கிடைக்காத நீதி இந்த ஆட்சியிலாவது கிடைக்கும் என காத்திருந்தும் இதுவரை கிட்டவில்லை இன்றைய தினம் ( நேற்று) ஜனாதிபதியை சந்திப்பதற்கு என மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தோம். இதன்போது ஜனாதிபதி நேரில் சந்தித்தார் சந்தித்தவரை நன்றிகளைத் தெரிவித்தோம்.
இருப்பினும் இலங்கையின் எப்பாகத்திலும் எந்த தடுப்பு முகாமிலும் எவரும் இரகசியமாக தடுப்புக்காவலில் இல்லை என்பதனை முப்படைத் தளபதிகள் மூலம் உறுதி செய்துள்ளேன் எனவும். இதனால் எந்த இடத்திலும் எவருமே இல்லை என்பதே நிலமையாகவுள்ளதாகவும் இருப்பினும் உங்கள் உறவுகள் காணாமல் போயுள்ளமை உண்மையானது ஆனால் அவர்கள் எவருமே எனது ஆட்சிக்காலத்தில் காணாமல்போகவில்லை.
இருப்பினும் உங்கள் உறவுகளை ஒப்படைத்தவர்கள் , கூட்டிச் சென்றவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் , ஆதாரங்கள் இருப்பின் அதன் அடிப்படையில் தேடப்படும் . அதேநேரம் எங்காவது உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் உடன் உங்கள் சகிதமே தேடுதல் நடாத்தவும் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதன்போது காணாமல்போன உறவுகள் நால்வர் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் திருகோணமலையில் இருந்து வருகை தந்த காணாமல்போன உறவு ஒன்றின் தாயாரான ஆசா இலங்கையின் ஓர் மாவட்டத்தின் இடத்தை தெரிவித்து அந்த இடத்தில் பலரை மறைத்து வைத்துள்ளதாக எமக்குத் திடமாகத் தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து உடனடியாக குறித்த இடத்தினை பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இருப்பினும் இந்த ஆட்சியிலும் எமது உறவுகள் கிடைப்பார்களா என்ற சந்தேகமே மிஞ்சுகின்றது.்என்றனர்