கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ தசநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் அடிப்படையில் தசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
தசநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி எதிர்வரும் 25ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி தொடக்கம் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி வரையில் 11 இளைஞர் காணாமல் போயிருந்தனர்.
கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசநாயக்க நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
உடல் நிலை பாதிப்பினால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என சட்டத்தரணி ஊடாக அறிவித்திருந்தார்.
தசநாயக்கவின் உடல் நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.