‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்

271 0

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஜெயலலிதா சமாதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஜெயலலிதா சமாதி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மாணவர்கள் மெரினா கடற்கரையில் திரண்டது போல், தற்போதும் கூடி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நேற்று வாகன போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டதுடன், அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கடற்கரை மணல் பகுதிக்கு செல்ல போலீசார் தடை விதித்ததால், அவர்கள் எம்.ஜி.ஆர். சமாதி, ஜெயலலிதா சமாதி, அண்ணா சமாதி அமைந்திருக்கும் பகுதிகளுக்கு மட்டும் சென்று வந்தனர்.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 27 பேர் நேற்று மதியம் 2.30 மணி அளவில் தனித் தனியே ஜெயலலிதா சமாதி இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.

பின்னர் அங்கு குழுவாக சேர்ந்த அவர்கள், ஜெயலலிதா சமாதி அருகே வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளையும் தாண்டி சமாதி முன் சென்று தரையில் அமர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மாணவ-மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது குறைந்த அளவிலான போலீசாரே அந்த பகுதியில் இருந்ததால், அவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்களிடம், கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் போராட்டத்திற்கு வரவில்லை, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கும் வகையில் தியானத்தில் ஈடுபட வந்துள்ளோம்” என்று கூறி தியானத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் ஒருவருடன் ஒருவர் கை கோர்த்தபடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி ஜெயலலிதா சமாதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

அப்போது மாணவ-மாணவிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் கோஷம் போட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

மாணவர்களின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் ஜெயலலிதா சமாதி பகுதியில் சுமார் 45 நிமிடம் பரபரப்பு நிலவியது. அந்த நேரத்தில் பொதுமக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர், குடும்பத்துடன் வந்தவர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், நேற்று 2-வது நாளான மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி கல்லூரி நுழைவு வாயிலுக்கு வெளியே சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் உள்ளே சென்று நுழைவு வாயில் அருகே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்களும் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நந்தனம் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கிண்டி ஜி.எஸ்.டி.-ஆலந்தூர் எம்.கே.என்.சாலை சந்திப்பில், நேற்று பகல் 2.30 மணி அளவில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை மற்றும் கிண்டி போலீசார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து சாலையின் ஓரத்திற்கு அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வழியாக சென்ற தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி அதில் அவர்களை ஏற்ற முயன்றனர்.

இதனால் மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். அப்போது மாணவர்கள் சிலர் போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த மாநகர பஸ்களில் ஏறி தப்பிச் சென்றனர். இருப்பினும் போலீசார் சுமார் 25 மாணவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை சேலையூர் அகரம்தென் பிரதான சாலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சேலையூர் போலீசார், மாணவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைத்தனர்.

இதேபோல் செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலையூர் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் திருவொற்றியூர் தலைமை தபால் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலந்தூர் கிளை சார்பில் பரங்கிமலை ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக அக்கட்சியின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ஜிந்தாமதார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave a comment