பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் பற்றி முதல்-மந்திரி சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க ஐ.ஜி. தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டுள்ளேன்.
கவுரி லங்கேஷ் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தந்தை காலத்தில் இருந்து கவுரி லங்கேஷ் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். கவுரி லங்கேஷ் வீட்டில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சில துப்பு கிடைத்துள்ளது.
கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடும் விதமாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கவுரி லங்கேஷ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கண்தானம் செய்திருந்ததால் முன்னதாக, டாக்டர்கள் அவரது கண்களை எடுத்துச் சென்றனர். முதல்-மந்திரி சித்தராமையா அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மந்திரிகள், நடிகர் பிரகாஷ்ராஜ், முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கன்னட திரையுலகினர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
சாம்ராஜ்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் துப்பாக்கி குண்டுகள் முழங்க கவுரி லங்கேசின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் (தி.மு.க), டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க. அம்மா), திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), தெகலான்பாகவி (எஸ்.டி.பி.ஐ.), நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்), சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.