சட்டவிரோத முடிவுகளுக்கு தலைமை செயலாளர் துணைபோகக்கூடாது: மு.க.ஸ்டாலின்

271 0

பெரும்பான்மையை இழந்த அ.தி.மு.க. அரசின் சட்டவிரோத முடிவுகளுக்கு தலைமை செயலாளர் துணை போகக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ந் தேதியில் இருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது.

தி.மு.க.வின் சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் சார்பிலும் குடியரசு தலைவரிடம் மனு அளித்து, “பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்“, என்று கோரிக்கை வைத்த பிறகும், பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.

இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி தொடுத்த வழக்கில், வாதாடிய அரசு தலைமை வக்கீல், ‘அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்-அமைச்சரை ஆதரிக்க வேண்டியது இல்லை. சிலர் ஆதரவு தெரிவிக்காமல் இருக்கலாம், என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஏற்கனவே ஆதரவளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இப்போது இல்லை என்பதும், இதன்மூலம் சட்டமன்றத்தில் இந்த அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மிக முக்கியமான அரசியல் சட்ட வழக்கில் அரசின் தலைமை வக்கீலே உயர்நீதிமன்றத்தின் முன்பு கூறிய இந்தக் கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உயர்நீதிமன்றத்தின் முன்பே தெளிவாக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தன் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதல்-அமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, பெரும்பான்மையை இழந்த இந்த அரசின் சட்டவிரோதமான முடிவுகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எக்காரணத்தைக் கொண்டும் துணை போகக்கூடாது என்றும், மைனாரிட்டி நிலைக்குச் சுருங்கிவிட்ட ‘குதிரை பேர‘ அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழல் – கொள்ளை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்திடக் கூடாதென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment