புதுவையில் தங்கி இருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திப்பதற்காக இன்று காலை சென்னை புறப்பட்டனர்.
தினகரன் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 18 பேர் புதுவைக்கு அழைத்து வரப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து இந்த எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புதுவை ஓட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
இடையில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இடைப்பட்ட காலத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். கவர்னர் அனுமதி அளித்தார். இதனால் புதுவையில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 7.45 மணி அளவில் இங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.
ஓட்டலில் 20 எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருப்பதாக தங்க.தமிழ்செல்வன் கூறி வந்தார். ஆனால், இன்று காலை புறப்பட்ட போது 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அதில் இருந்தனர்.இதுபற்றி கேட்ட போது, தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சென்னையில் தயாராக இருப்பதாக கூறினார்கள்.
கடந்த 22-ந்தேதி தொடங்கி இன்றுவரை 17 நாட்களாக புதுவையில் தங்கி இருந்த அவர்கள் ஓட்டலை காலி செய்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர். மீண்டும் புதுவைக்கு வருவீர்களா? என்று கேட்ட போது பதில் சொல்ல மறுத்து விட்டனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் தங்களை ஆதரிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே? என்று கேட்ட போது, நாங்கள் யாரும் அவர்களை ஆதரிக்கவில்லை. ஜெயக்குமார் தவறான தகவலை பரப்புகிறார் என்றும் கூறினார்கள்.