மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தது.
இதன்போது ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது தேர்தல்கள், கட்சியின் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த சந்திப்பின் பின்னர், பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த ஏழு பேரும் அரசாங்கத்தில் இருந்து விலகும் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரத்தியே சந்திப்பின் போது, தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் இருக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் எனவே நாடாளுமன்றத்தில் எதிராணியாகவும் ஆளும் அணியாகவும் இருக்கும் சுதந்திர கட்சியின் இரண்டு தரப்பினையும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர்களால் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு தாங்கள் ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும், ஜனாதிபதியும் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடிவதாகவும் அருந்திக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.