சார்ஜாவில் கடந்த வாரம் விருந்தக தொடர் மாடி ஒன்றில் இடம்பெற்ற மூன்று இலங்கையர்களின் மரணங்கள் தற்கொலைகள் என கண்டறியப்பட்டுள்ளது.
சார்ஜா காவற்துறையினர் இதனை கல்ப் நிவ்ஸ் செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது தற்கொலைக்கு முயன்ற இரண்டு பெண்கள் உரிய சிகிச்சையினால் காப்பாற்றப்பட்டனர்.
55 வயதான ஜே.கே என அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் பீ.எஸ் என அடையாளப்படுத்தப்பட்ட அவருடைய மனைவி ஜே.என் என அடையாளப்படுத்தப்பட்ட 19 வயதான மகன் ஆகியோரே சம்பவத்தில் மரணித்தவர்களாவர்.
டி.வன் என அடையாளப்படுத்தப்பட்ட 17 வயதான பெண் மற்றும் பி.வன் 27 என அடையாளப்படுத்தப்பட்ட பெண் ஆகியோரே ஹல் குவைட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒபைடல்லா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி அதிகாலை 2.30 அளவில் ஒருவர் 7 ஆம் மாடியிலிருந்து வெளியில் குதிப்பதை கண்ட பொது மகன் ஒருவர் காவற்துறையினருக்கு அறிவித்திருக்கிறார்.
இதனையடுத்து காவற்துறையினரும் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளார்கள்.
இதன்போது குறித்த வீட்டில் முன்கதவு மூடப்பட்டுள்ள நிலையில் அதனை உடைத்து உள்ளே சென்ற போது பின்புற பகுதியிலிருந்து இந்த தற்கொலைகள் இடம்பெற்றமை கண்டறியப்பட்டது.
விசாரணைகளின் படி தற்கொலைக்கு முயன்ற இளைஞன் தமது மணிகட்டை கத்தியால் வெட்டிய நிலையில் முதலில் இறந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து, ஏனைய மூன்று பெண்களும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனையடுத்தே குடும்பஸ்தனான 57 வயதானவர் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த தொடர்மாடி விருந்தகத்தின் பேச்சாளர் ஒருவர் கல்ப் நிவ்ஸ் செய்தி சேவைக்கு தகவல் வழங்கியிருக்கிறார்.
இதன்படி குறித்த குடும்பத்தினர் ஆறாயிரத்து 250 டினாரை செலுத்தி அங்கு வசித்து வந்துள்ளனர்.
குடும்பத்தின் தலைவர் டுபாயில் தங்க விற்பனை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
எனினும் மூன்று மாதங்களாக அவருக்கு உரிய வேதனம் கிடைக்காமை காரணமாக தம்மிடம் வாடகையை குறைத்து கொள்ளுமாறு கேட்டமைக்கு இணங்க 500 டினாரை குறைத்து தாம் வாடகையை அறவிட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணைகள் தொடர்வதாக சார்ஜா காவற்துறையை கோடிட்டு கல்ப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.