9 வருடங்களின் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நாடாளுமன்ற பணியாளர்கள் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உணவு விநியோக பிரதி முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் காலை உணவின் விலை 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், 150 ரூபாவுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிலிருந்து விருந்தினர்களை அழைத்துவரும்போது, 12 பேரைவிட அதிகமானோர் அழைத்து வரப்படுவார்களாயின், மதிய உணவுக்காக ஒருவருக்கு 600 ரூபாவை அறிவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் நாடாளுமன்ற பணியாளர் குழுவினர் ஆகியோருக்கு வழங்கப்படும் உணவுகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 65 ரூபாவுக்குவழங்கப்பட்டுவந்த ஊடகவியலாளர்களுக்கான மதிய உணவு, 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேநீருக்காக வழங்கப்படும் சிற்றுண்டிகளுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இதுவரையில் 10 ரூபாவுக்குவழங்கப்பட்ட பால்தேநீரின் விலை 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உணவு விநியோக பிரதி முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளியிலிருந்து வரும் சாதாரண விருந்தினர்களுக்கான மதிய உணவு 250 ரூபாவுக்கு தற்போது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.