வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை -பிரதான சாட்சியாளர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

243 0

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளர் சுதேஷ் நந்திமாலின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு வழிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ – லுனாவ – புரன்அப்பு ரஜ மாவத்தையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று இரவு இந்த தாக்கதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் வந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் இடம்பெறும் போது சுதேஷ் நந்திமால் குறித்த வீட்டிலேயே இருந்துள்ளார்.

எனினும் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

2012 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 11ம் திகதி வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 40 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெறும் வேளையில் வெலிக்கடை சிறையில் இருந்த சுதேஷ் நந்திமால், இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

அதேநேரம், நேற்றையதினம் வாதிகள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் பிரிவில் வைத்து சுதேஷ் நந்திமால் காவற்துறையிடம் வாக்குமூலம் வழங்கி இருந்தார்.

இதன்போது, தம்மை கொலை செய்வதற்கான சூழ்சி இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த துப்பாக்கித் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதேஷ் நந்திமால்,

நேற்றிரவு சுமார் 11 மணிளவில் தமது வீட்டுக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் வீட்டின் வாயிற்கதவு சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

படுகொலையொன்று தொடர்பில் சாட்சி வழங்க முன்வந்துள்ள தமக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்படுவதால், தமது பாகாப்பை உறுதி செய்யுமாறும் அவர் கோரியுள்ளார்.

தம்மை கொலைசெய்ய சூழ்ச்சி முன்னெக்கப்படும் நிலையில், கொலையாளிகளை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சுதேஷ் நந்திமால் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி, முன்னாள் நீதி அமைச்சரும் இந்தக் கொலையாளிகளை பாதுகாத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

 

 

 

 

Leave a comment