நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் நாளை புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டிருந்தசகல அரச பாடசாலைகளும் மூன் றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக நாளை 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகளின் விடைத்தாள் திருத்தப்பணிகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில் 22 பாடசாலைகள் பகுதியளவிலும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, கொழும்பு ரோயல் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி விஹாரமகாதேவி மகளிர் பாடசாலை, கண்டி ஸ்வர்ணமாலி மகளிர் பாடசாலை மற்றும் கண்டி சீத்தாதேவி கல்லூரி ஆகிய பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளன. குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக இம்மாதம் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இதேவேளை இரண்டாம் தவணைக் காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.