இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வருண என்ற ரோந்து கப்பல் இலங்கை கடற்படையிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இன்று இந்திய கொச்சி கடற்படைத் தளத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இலங்கை கடலோர காவற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சமிந்த விமலதுங்க இக் கப்பலை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கைக்கு இந்திய கடற்படை ரோந்து கப்பல்களை வழங்குவது முதல்முறையல்ல. கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து நீக்கப்பட்ட ஐ.என்.எஸ் சரயு என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டது. இக்கப்பல் எஸ்.எல்.என்.எஸ் சயுரள என்ற பெயரில் ஸ்ரீலங்கா கடற்படையில் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேலுமொரு கடலோர பாதுகாப்பு ஆயுத கப்பல் ஒன்றை இலங்கை கடற்படை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
இது குறித்து கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்படைக்கு கடலோர பாதுகாப்புகளை கையாள கப்பல்கள் தேவைப்படுகின்ற நிலையில் இந்தியாவிடம் இருந்து இந்த கப்பலை நாம் கொள்வனவு செய்கின்றோம். ஐ.சி.ஜி.எஸ் வருண என்ற இந்திய பெயரை கொண்ட இந்த கப்பலை பார்வையிட எமது கடலோரக் காவல்படையின் தளபதி ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை ( இன்று) கொச்சியில் இடம்பெறும் கடற்படை நிகழ்வில் இந்தக் கப்பல் எமக்கு வழங்கப்படும்.
இம் மாத நடுப்பகுதியில் இக் கப்பல் இலங்கையை வந்தடையும். அதன் பின்னர் இலங்கைக்கான பெயர் சூட்டப்பட்டு எமது கடற்படையின் கட்டுப்பாட்டில் செயற்படும். குறிப்பாக கடலோர பாதுகாப்பு நகர்வுகளை அதிகமாக பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் எமது நாட்டை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படவே இந்த நடவடிக்கைகளை கையாண்டு வரு கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.