பாசமுள்ள பார்வையில்… அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா

14522 0

நிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் அந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே சிந்திக்க வைத்ததுடன் மனித நேயத்தின் ஒப்பற்ற வார்த்தையாகவும் அது போற்றப்படுகின்றது. 

அன்பு என்ற மூன்றெழுத்தில் அகிலமே அடங்கியிருப்பதாக அனைத்து மதங்களும் போதிக்கின்ற நிலையில் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் அன்பாகவே கழித்து, பிறருக்கு பணிவிடை செய்வதில் செலவழித்து,அண்டசராசரமே போற்றும் ஒப்பற்ற தேவதையாக மாறியஅன்னை தெரேசாவால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளே அவை.

உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி பிறந்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு என்ற இயற்பெயரை கொண்ட அன்னை உலகில் எத்தனையோ அநாதைகளுக்கு தான் தாயாக விளங்கப்போவதை ஊகிக்க முன்னரே தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்து சொல்லொணா துயரங்களை அனுபவித்தார். சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ ஆரம்பித்தசிறுமி ஆக்னஸ் 12 வயதில் தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு தன்னை அர்ப்பணித்தார்.

ஏழை, எளியவருக்கு சேவை செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தல், மருத்துவ மனைகளுக்கு சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல் போன்ற சமூக சேவைகள் பற்றி சிறுவயது முதலே தனது தாயாரிடம் கேட்டறிந்த அன்னை தெரேசா, இத்தகைய நற்பணிகளின் பின்னணியில் லொரொட்டோ சபையின் சகோதரிகள் இருப்பதையும் தனது தாயார் மூலம் அறிந்துகொண்டார். தானும் அப்பணியில் இணைந்து கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் அவரை சூழ்ந்துகொண்டதுடன் அந்தநாளுக்காக காத்துக்கிடந்தார்.

ஒரு இளநங்கையாக தனது 18ஆவது வயதில்அயர்லாந்திலுள்ள லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் பொதுவாழ்க்கை என்ற கடுமையான பாதையில் வழிநடந்து செல்ல ஆரம்பித்த தெரேசா அம்மையார் 19 ஆவது வயதில் தனது கனவு தேசமான இந்தியாவின் கல்கத்தாவுக்கு வருகை தந்தார்.

தனது கடைசி மூச்சு வரை இந்தியாவில் தங்கி ஏழைகளுக்கு உதவப்போவதையும் தனது வாழ்நாளில் ஏனைய 68 ஆண்டுகளையும் இந்தியாவில் கழிக்கப்போவதையும் உணர்ந்தாரே இல்லையோ என்பதை பார்க்கிலும் அவரது கருணை மழையில் நனையும் பாக்கியம் இந்தியர்களுக்கு கிடைத்தமையானது ஒட்டுமொத்த இந்திய மக்கள் செய்த பெரும் பாக்கியமாகும்.

1931 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி உத்தியேகபூர்வமாக அருட்சகோதரியாக நியமனம் பெற்றுக்கொண்டு தனது பணியை ஆரம்பித்த அன்னை தெரேசா அம்மையார் அவ்வருடம் முதல் 1948 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்கத்தாவிலுள்ள,புனித மரியாள் உயர்தர கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றியிருந்தார். இக்காலகட்டத்தில் கல்லூரியில் சுவர்களுக்குள் அவரது காலம் செலவழிந்தபோதிலும், சுவர்களுக்கு வெளியே கல்கத்தா வாழ் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள், பசி, நோய் ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்த அன்னை தவறவில்லை.

உலக வல்லரசுகள் தமது அதிகாரத்தை நிரூபிக்கும் பொருட்டு ஏனைய நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டாவது உலக மகா யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு இளம் கன்னிகை அணுஆயுதத்தை பார்க்கிலும் அன்பின் ஆயுதமே உயர்ந்தது என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்திக்கொண்டிருந்ததை உலக நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன.

கன்னிமடத்திலிருந்தால் ஏழைகளுக்கு முழு நேரமும் தொண்டு செய்ய முடியாது என்பதை உணர்ந்து அன்னை 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்ததுடன் பாரம்பரிய லொரோட்டாவின் அங்கிகளை களைந்து நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்து தமது பணியை ஆரம்பிக்க வெளி யேறியமையானது சமாதான புறா தனது கூண்டிலிருந்து வெளியே வருவதற்கு சமனாக இருந்தது.

அன்னை தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும்,வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும் ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும் குறிப்பிட்டிருந்ததன் மூலம் அன்னை ரோஜா தோட்டத்தில் அல்ல முட்பாதைகளுக்குள்  பயணித்திருக்கின்றார் என்ற உண்மை தெளிவாகின்றது.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்திருக்கின்றார். கைக்குள் விழுந்த எச்சிலைமூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும் ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்ற அமைதியான பதிலால் திக்குமுக்காடிப் போன அந்நபர் அன்னையின் கால்களில் வீழ்ந்து கதறியழுது மன்னிப்பு கோரியதுடன் ஏழைகளுக்கு வாரி வழங்க முன்வந்தார். இது அன்னையின் பொறுமைக்கு கிடைத்த பரிசு.

நீ காணும் உன் சகோதரனிடத்தில் அன்பு காட்டாமல் நீ காணாத கடவுளிடம் அன்பு காட்டுவது எவ்வாறு என்ற திருவிவிலிய வார்த்தையை அடிக்கடி மேற்கோள்காட்டி தனது உரைகளை நிகழ்த்தியுள்ள அன்னை அந்த வார்த்தையே அர்த்தமுள்ளதாக்கி அதற்கமைய வாழ்ந்து காட்டினார்.

மிஷனரிஸ் ஒப் செரிட்டி என்ற அமைப்பு அன்னை தெரேசாவால் தோற்றுவிக்கப்பட்டதுடன் அவரது ஒப்பற்ற சேவையின் பலனாக இன்று 133 நாடுகளில் 4,500 க்கும் அதிகமான கன்னியாஸ்திரிகளால் மக்களுக்கு சேவையாற்றப்படுகின்றது.

தனது பணிக்கு ஒருபோதும் விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. உலக சமாதானத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசு 1979 ஆம் ஆண்டு அன்னைக்கு வழங்கப்பட்டதுடன் சமாதான தேவதையின் கரங்களில் தவழ்ந்த நோபல் பரிசுக்கு அன்றுதான் உண்மையான வரைவிலக்கணம் கிடத்தது.

நோபல் சமாதான விருது வழங்கும் விழாவில் கருக்கலைப்பானது உலகில் இருக்கும் மிகக் கொடிய பயங்கரமான செயல் என அன்னை தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரையும் கவர்ந்தது. ஒரு சிசுவை கொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவரது வாதத்துக்கு எத்தரப்பினரும் எதிர்வாதம் செய்ய முன்வரவில்லை. நோபல் விருது வழங்கப்பட்டதன் பின்னர் நடைபெறவிருந்த விருந்து உபசாரத்தை இரத்து செய்யுமாறும் அதற்கு செலவிடப்படும் தொகையை ஏழை மக்களுக்கு வழங்குமாறு அன்னை கோரிக்கைவிடுத்தபோது அவரது சுயநலமற்ற அன்பை உலகமே உணர்ந்துக்கொள்ளத் தவறவில்லை.

23ஆவது போப் ஜான் அமைதி விருது, நல்ல சமாரியன் விருது, கென்னடி விருது, டெம்பிள்டன் விருது, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பெல்ஜிய நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், சுதந்திரத்துக்கான பிரசிடென்ஷியல் விருது, அமெரிக்காவின் கௌரவப் பிரஜை உள்ளிட்ட சர்வதேச விருதுகள் அவரை தேடிவந்து தமது விருதுகளுக்கான கௌரவத்தை அவை பெற்றுச் சென்றன.

1962 இல் பத்மஸ்ரீ விருது,1972இல் சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது,1980-இல் இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதான பாரத ரத்னா உட்பட பிரதான இந்திய உயர்விருதுளை இந்திய அரசாங்கம் அவருக்கு வழங்கி இந்தியாவுக்கு பெருமையை பெற்றுக்கொண்டது.

மாரடைப்பினாலும்  நுரையீரல், சிறுநீரகம் ஆகியன பாதிக்கப்பட்ட நிலையிலும் கல்கத்தாவில் தங்கியிருந்த அன்னைக்கு இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு 9.30 மணிக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டதுடன் அவரது அறையிலிருந்து இயேசுநாதரின் புகைப்படத்தை பார்த்தவாறே அவர் தனது பணியை நிறைவுபடுத்திக்கொண்ட முழுதிருப்தியுடன் மண்ணுலகிற்கு விடைகொடுத்தார்.

அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு அவரது 87ஆவது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கலங்கின.தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளிஅள்ளி வழங்கினார்.

அன்பு, நேசம், பாசம், கருணை அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாக வரைவிலக்கணமாக வாழ்ந்து இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்னை தெரேசா. அன்பு என்றால் அன்னை தெரேசா என்ற பெயரை வரலாற்றிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.

உன்னை நேசிப்பதை போல பிறரையும் நேசி என்ற வார்த்தைக்கு முன்னுதாரணம். இந்த உலகில் அனைவராலும் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படும், நேசிக்கப்படப்போகின்ற ஒருவர் அன்னை தெரேசாவே. இவரது முகம் அன்பை தவிர வேறு எதனையும் மனிதருக்கு போதிக்கவில்லை.

அன்னை தெரேசா மரணித்த தினமான செப்டம்பர் 5ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளமையானது மனிதநேயம் கொண்ட சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய் ஆனால் நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்

Leave a comment