சிரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் தெயிர் அல்-ஸோர் பகுதியில் ரஷிய ராணுவவீரர்கள் வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ரோந்துவாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அந்த வாகனத்தில் சென்ற இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ரஷிய அரசு போரில் இறந்த வீரர்களுக்கான விருது அறிவித்துள்ளது.