கொழும்பு கோட்டையிலிருந்து – பதுளை நோக்கி சென்ற ரயில் ஹட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் பாதை ஊழியர் ஒருவர் விரைந்து செயற்பட்டமையினால் தவிர்க்கப்பட்டுள்ளது.
பதுளை ரயில் சேவை 1 மணித்தியாலத்தின் பின் மீண்டும் சேவையை ஆரம்பித்ததாக ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
ஹட்டன் சிங்கமலை சுரங்க பாதைக்குள் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்க மலை சுரங்கத்தினுள்ளிருந்து வௌியேறி எதிரே அட்டன் ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி பயணத்தை மீண்டும் ஆரம்பித்த ரயிலை சிவப்பு சமிஞ்சை காட்டி நிறுத்தியுள்ளார்.
காலிங்க பண்டார எனும் குறித்த ஊழியரின் சிறப்பான செயற்பாட்டினால் சிங்கமலை சுரங்கத்தினுள் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தமொன்றும் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயில் இன்று (04) மதியம் 1.45 மணியளவிலே மீண்டும் பதுளை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடைந்து காணப்பட்ட ரயில் தண்டவாளப்பகுதி அட்டன் ரயில் நிலைய ஊழியர்களினால் திருத்தியமைத்தப்பின் பதுளைக்கான ரயில் சேவை சுமார் 1 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியது.