சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் – படை வீரர்கள் 26 பேர் பலி

275 0

சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அங்கு பல கிராமங்களில் இவர்கள் மத அடிப்படையிலான சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.

2012-ம் ஆண்டு முதல் அல்கொய்தா இயக்கத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிற இந்த அமைப்பினை அமெரிக்காவும், இங்கிலாந்தும் தடை செய்துள்ளன.

இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் சோமாலியா நாட்டின் தென் பகுதியில் உள்ள துறைமுக நகரான கிஸ்மாயு நகருக்கு அருகே அமைந்துள்ள ஜூபலாண்ட் ராணுவ தளத்தின்மீது நேற்று காலை திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் படை வீரர்கள் திணறிப்போயினர். இந்த திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, “பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்றது” என்றனர்.

அல் ஷபாப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்தியாசிஸ் அபு முசாப் ‘ராயிட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “இன்று காலை (நேற்று காலை) நாங்கள் ஜூபலாண்ட் ராணுவ தளத்தின்மீது அதிரடி தாக்குதல் நடத்தினோம். படை வீரர்கள் 26 பேரை கொன்று குவித்தோம். 2 கார்களை எரித்தோம். 3 கார்களை அங்கிருந்து கைப்பற்றினோம்” என்று கூறினார்.

மேலும் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் எடுத்துச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment