வடகொரியா அணுஆயுத சோதனை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது ஐ.நா.சபை

566 0

வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக ஐ.நா. சபை இன்று கூடுகிறது.

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) நேற்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

வட கொரியா இன்று நடத்திய அணு குண்டு பரிசோதனை கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவும் வடகொரியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்பகத்தின் தலைவர் யூக்கியா அமானோ இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’சர்வதேச சமுதாயத்தின் அறிவுறுத்தல்களை மீறிய வகையில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆறாவது முறையாக வடகொரியா இன்று நடத்தியுள்ள அணு குண்டு சோதனை மிகுந்த கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில். வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனைகள் குறித்து ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டுமென அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ், பிரட்டன் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்தன. அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்) காலை 10 மணியளவில் ஐ.நா.வின் சிறப்பு கூட்டம்  நடைபெறுகிறது. இதில் வடகொரியா பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a comment