சீனாவின் ஷியாமென் நகரில் 9வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை சந்தித்து பேசுவது வழக்கம். உலகளாவிய பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள இந்த மாநாட்டில் பேசப்படும்.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை கோவாவில் இந்தியா நடத்தியது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு 5-ம் தேதி(நாளை) வரை நடைபெற உள்ளது.
முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி ஷியாமென் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்றது. மாநாட்டு வருகை புரிந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் தெமெர் உள்ளிட்ட தலைவர்களை அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார்.
இம்மாநாட்டில் இடையே, சீன அதிபர் ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இருநாட்டு உறவுகள், தீவிரவாத எதிர்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பேசுவார் என்று கூறப்படுகிறது.