அமெரிக்காவில் ஹார்வே புயல் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்திடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பேரழிவை ஏற்படுத்திய ஹார்வே புயலுக்கு சுமார் 50 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் சுமார் 1,85,000 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
மேலும், 9 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் வெள்ள அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்துள்ளது.
வீடு மற்றும் உடமைகளை இழந்த 43,500க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,36,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை சீரமைக்கவும், விடுதிகளில் தங்கவும் நிதி உதவி கோரி அரசிடம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் 7.8 பில்லியன் டாலர் (50,000 கோடி ரூபாய்) நிதியுதவி அதிபர் சார்பில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிபர் டிரம்ப், ஹார்வே புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக தனக்கு சொந்தமான ஒரு மில்லியன் டாலர் வழங்கி உள்ளார். மேலும் டெல், மைக்ரோசாப்ட், சாம்சங் உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் புயல் நிவாரண நிதியாக சுமார் 1,105 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன.