நைஜீரியா போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர்.
2009-ம் ஆண்டு முதல் அவர்கள் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஆட்களை கடத்துவதும், படுகொலைகள் செய்வதும் அவர்களின் அன்றாட வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில், போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள பாங்கி என்ற நகரத்துக்குள் நேற்று முன்தினம் இரவு இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைகளில் கத்தியுடன் நுழைந்தனர்.
தங்கள் கண் எதிரே பட்டவர்களையெல்லாம் அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு, அங்கிருந்து தப்பினர். இதனால் அந்த நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சம்பவத்தில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்று ராணுவம் கூறியது தவறான தகவல் என்று நிரூபிக்கிற வகையில் சமீப காலமாக அங்கு அந்த அமைப்பினர் தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.