அணு குண்டு பரிசோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இன்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது.
அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
சர்வதேச தடைகளைப் பற்றி பொருட்படுத்தாத வடகொரியா ஆறாவது முறையாக இன்று அணு குண்டு பரிசோதனை செய்ததற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கண்டனம் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இந்த அத்துமீறலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வண்மையாக கண்டித்தே ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அணு குண்டைவிட கடுமையான பேரழிவை ஏற்படுத்த கூடிய ‘ஹைட்ரஜன்’ குண்டுகளை தயாரித்துள்ளதாக வடகொரியா சமீபத்தில் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய அணு குண்டு சோதனை தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணு குண்டு பரிசோதனை என்று குறிப்பிட்டதைதான் வட கொரியா தற்போது ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை என்று தெரிவித்துள்ளதா?, அல்லது, தனியாக ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை நடத்தியதா? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.