பழமை வாய்ந்த கலசமகாலில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இதனை சீரமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் பாராட்டு தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ‘தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்‘ சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலசமகால் கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று எழிலகத்தில் நடந்தது. விழாவுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சஞ்சய் கிஷன் கவுல், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.கருப்பண்ணன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஸ்வதந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு உள்ள நீதிமன்ற அறை, கூட்ட அரங்கு மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மற்றும் நீதிபதிகள் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து, சுற்றுச்சூழல் கருத்தரங்கு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டு இ-கோர்ட்டை திறந்து வைத்தும், பசுமை தீர்ப்பாயம் சார்பில் தயாரிக்கப்பட்ட விழா மலரையும் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘பழமையான கலாசாரம், பண்பாடு, கலை நிறைந்த மாநிலம் தமிழகம். 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை மேம்படுத்தி பசுமை தீர்ப்பாயத்துக்கு கொடுத்து உள்ளனர். இதனை செயல்படுத்திய தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது’ என்றார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசும்போது, ‘ஆக்கிரமிப்புகளில் இருந்து நதிகளை மீட்க முடியவில்லை. ஆக்கிரமிப்பு அதிகரித்ததால்தான் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையிலும், தற்போது மும்பையிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழகம் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது’ என்றார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும் போது, ‘தற்போது பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தென்மண்டல தீர்ப்பாயம் சுற்றுசூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
விழாவில் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, தென்மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினர் பி.எஸ்.ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.