இலங்கை யுத்த காலத்துக்கு பின்னர் போதைப்பொருள் பரிமாற்றும் மத்திய நிலையமாக மாற ஆரம்பித்துள்ளது என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
“விடுதலைப்புலி பயங்கரவாதத்துக்கு நாங்கள் முகம் கொடுத்தோம், தற்போது அது இல்லை. ஆனால், தற்போது சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க தயாராக வேண்டும்.
விசேட அதிரடிப்படையினரை சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க தேவையான முறையில் பயிற்றுவித்தலுடன் அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதேபோன்று விசேட அதிரடிப்படைப்பிரிவை புதுப்பிப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பிரதான பிரச்சினையாக போதைப்பொருள் பிரச்சினை இருந்துவருகின்றது. இலங்கை யுத்த காலத்துக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் மத்திய நிலையமாக மாற ஆரம்பித்துள்ளது.
அதாவது போதைப்பொருள் பரிமாற்ற மத்திய நிலையமாக மாறியுள்ளது. போதைப்பொருள் வேறு நாடுகளில் இருந்து இங்கு வருகின்றது. இங்கிருந்து அது ஏனைய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது. என்றாலும் இதில் ஒரு பகுதி நாட்டில் வைத்துக்கொள்ளப்படுகின்றது.
அத்துடன் எமது பிள்ளைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த போதைப்பாவனை அதிகரித்துள்ளதாக எங்களுக்கு அறியக்கிடைக்கின்றது. இன்று சிறிய வகையான போதை குளிசை பாவனையில் இருக்கின்றது. அதனை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும்.
இளம் சந்ததியினருக்கு இது பாரிய பிரச்சினையாகும். அத்துடன் போதை வியாபாரத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.
போதைப்பொருள் வியாபாரம் பாரியளவில் பணம் சம்பாதிக்கும் வழியாகும். பணம்தான் இன்று அதிகாரம் செலுத்துகின்றது. பயங்கரவாதிகள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதும் அதனூடாக பணம் சம்பாதிப்பதும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கையை கொண்டுசெல்வதற்காகவாகும், சர்வதேச பயங்கரவாதிகள் இன்று போதைப்பொரு வியாபாரத்தில் பிரதான வியாபாரிகளாக இருக்கின்றனர்.
அதனால் இலங்கையில் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முறியடிப்பதற்கு புதிய பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.