பொன்னாலை பருத்தித்துறை இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி!

5065 0

பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி வழங்கப்படும் என படைத்தரப்பினர் தெரிவித்துள்ளாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி வழங்கப்படும் என படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதாவது மயிலிட்டித்துறைமுகம் மீனவர்களின் பாவனைக்காக விடுவித்ததோடு அதனை அண்டிய சிலபிரதேசங்களும் அண்மையில் விடுவிக்கப்பட்டன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்கள் தற்போது பருத்தித்துறையில் வசிக்கும் நிலையில் இரு பேரூந்துகளில் 40 கிலோமீற்றர் மேலதிக பயணம் மேற்கொண்டே துறைமுகப் பகுதியினை சென்றடைய வேண்டிய நிலமை காணப்படுவதாகவும். அவ்வாறு மேலதிக பயணத்திற்காக சுமார் 2 மணிநேரத்தையும் அதிக பணத்தையும் செலவு செய்யவேண்டிய நிலமை காணப்படுவதனால் இவற்றினை தவிர்க்கும் நோக்கில் குறித்த பாதையில் சுமார் 4 கிலோமீற்றர் நீளமான பிரதேசத்தின் ஊடாக பயணம் செய்வதனை படையினர் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த நெருக்கடியினை தவிர்க்க முடியும் என படையினரிடம் பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த பாதையில் தினமும் 2 மணி நேரத்திற்கு ஓர் பேரூந்து சேவையில் ஈடுபட அனுமதிப்பதாக படைத்தரப்பால் இணக்கம் தெரிவிக்கப்பட்டதனால் அப்பகுதியின் ஊடான போக்குவரத்திற்கு நேர அட்டவனை தயாரித்து வழங்கியுள்ளோம். அதனை படையினர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கும் சந்தர்ப்பத்தில் அடுத்த வாரம் முதல் குறித்த சேவை இடம்பெற எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர் பின் அடிப்படையில் காலை முதலாவது பேரூந்து 5.30ற்கும் மாலையில் இறுதிப் பேரூந்து 7.30ற்கும் இடம்பெறும் வகையிலேயே குறித்த நேர அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. என்றார்

Leave a comment