வட மாகாணத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியின் மூலம் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்கள் அமைப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியின் மூலம் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்கள் அமைப்படவுள்ளது. அதாவது தற்போது தர்மபுரத்தில் ஒன்று இயங்கும் அதேநேரம் சாவகச்சேரியிலும் இயங்குகின்றது. இவற்றின் முன்னேற்றம் கருதி வட மாகாண சுகாதார அமைச்சினால் முன்னர் விடப்பட்டிருந்த கோரிக்கையின் பயனாக இவையும் கிடைக்கப்பெறுகின்றன.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பிரதேசத்திலும் , மன்னார் முருங்கன் வைத்தியசாலையிலும் , முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையுடனும் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு வவுனியாவில் பூவரசங்குளம் வைத்தியசாலையுடன் என மேலும் 4 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு நிலையங்களும் தலா 30 மில்லியன் பெறுமதியிலானவையாக நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு அமைக்கப்படும் புதிய சிகிச்சை நிலையங்களிற்குமான மொத்தம் 120 மில்லியன் ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மாவட்ட அரச அதிபரின் கீழ் முன்கொண்டு செல்லப்படவுள்ளது. என்றார்.