மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

561 0

மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து வந்தார் அனிதா. அவரது உழைப்புக்கு ஏற்றார்போல் பிளஸ் டூவிலும் அதிக மதிப்பெண் பெற்றார்.
இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
எனவே, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின்
அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதைதொடர்ந்து, அனிதா கடந்த சில தினங்களாக மருத்துவ படிப்பு வாய்ப்பு பறிபோனதே என மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில், இன்று அனிதா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அனிதா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அனிதாவின் மரணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அனிதாவின் உறவினர்கள் கூறுகையில், அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் இருந்தார். அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்தார். அனிதா தற்கொலை செய்துகொண்டது வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவரை கண்டிப்பாக தடுத்திருப்போம். அனிதா வாழ்க்கை பாழாக, நீட் தேர்வே காரணம் என குற்றம் சாட்டினர்.

Leave a comment