வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்கின்றவர்களின் பாடசாலைக் கல்வியினைத் தொடரும் பிள்ளைகளுக்கு கூடுதலான சலுகைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் சேவை கடந்த திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – வறுமை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களே அதிகமாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் இவ்வருடம் 1400 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் 900பேர் பெண்களாவர்.
கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் காரியாலயத்தினை மீண்டும் திறக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அரசியல் தலைவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் பெருந்தொகையானோர் வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பதிவு செய்யாமல் செல்கின்றனர். இதனால் பாரிய அனுகூலங்களை வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் மக்கள் இழந்து வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தின் மூலம் பதிவு செல்வோருக்கு ஓய்வூதி யம், புலமைப்பரிசில் மற்றும் காப்புறுதி போன்ற பல்வேறு பாரிய நன்மைகள் கிட்டுகின் றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காக வேண்டியே விசேட நடமாடும் சேவை நாடுபூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமொன்றினை திறக்கவுள்ளோம்.
ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கமும் இனவாதம் இல்லாமல் மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ. அமீர், திணைக்களங்களின் தலைவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.