செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்துள்ள பேட்டி:
வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மிகவும் அதிகமாக செஞ்சியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று, தமிழக வளிமண்டலத்தில் வீச வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களின் உள் பகுதியின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையின் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெய்துள்ள தென்மேற்கு பருவமழை 25 செ.மீ., பதிவாகியுள்ளது. இது எப்போதும் பெய்வதை விட 23 சதவீதம் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.