மருத்துவ கலந்தாய்வின்போது பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். /பி.டி.எஸ் இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு 30.8.2017 அன்று முடிவு பெற்றது. 31.8.2017 மற்றும் 1.9.2017 ஆகிய நாட்களில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் 2.9.2017 மற்றும் 3.9.2017 ஆகிய நாட்களில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி கல்லூரிகளால் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் ஆகியவற்றிற்கு இரண்டாம் கட்டகலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி, இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து தீர்ப்பதற்கு கூர்ந்தாய்வுக் குழு கலந்தாய்வு அரங்கத்திலேயே ஏற்படுத்தப் பட்டுள்ளது. மாணவர்களால் அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு, கூடுதலாக அவர்களிடமிருந்து மற்ற மாநிலங்களில் அவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெறவில்லை என்றும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழோ, நிகர் நிலை பல்கலைகழகங்களிலோ அல்லது வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவ படிப்பிற்கான ஒதுக்கீடு பெற்று சேரவில்லை என்றும் மற்றும் அவர்கள் கொடுத்துள்ள அனைத்து சான்றிதழ்களும் உண்மையானவை என்றும் உறுதிமொழி அவர்களிடமிருந்து பெறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் பிற மாநிலங்களில் படித்த மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் படித்த மாணவர்கள் ஆகிய இரு பிரிவினரும் கலந்தாய்வின் போது அளித்த
பூர்வீகச் சான்றிதழ்கள் அனைத்தும், அச்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சிதலைவர்களால் அவற்றின் உண்மைத் தன்மை மற்றும் தகுதி ஆகியன சரிபார்க்கப்படும்.
இரட்டைச் சான்றிதழ்களைத் தடுக்கும் வகையில் இத்தகைய மாணவர்கள் படித்த மாநிலங்களின் மருத்துவத் தேர்வுக் குழுவுக்கு விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு இதே மாணவர் அம்மாநிலத்திலும் அந்த மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ், அந்த மாநிலத்தின் பூர்வீக சான்றிதழின் அடிப்படையில் ஒதுக்கீடு பெற்றுள்ளாரா என்பதும் கண்டறியப்படும். மேற்காணும் நிகழ்வுகள் ஏதேனும் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அச்சேர்க்கை ரத்து செய்யப்பட்டு தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.