பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான விற்பனை அதிகாரி நுவன் சல்காது கைது செய்யப்பட வேண்டும் என பிணை முறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
திரிவுப்படுத்தப்பட்ட சாட்சி வழங்கல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் குற்றத்திற்கான தவறை இழைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு பிரதானி சச்சித் தேவதந்திரி ஆணைக்குழு முன் இன்றும் சாட்சி வழங்கினார்.
கொடுக்கல் வாங்கல் அறையின் குரல் பதிவு செய்யும் கட்டமைப்பின் 15 குரல் பதிவுகளை அகற்றுமாறு பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதான விற்பனை அதிகாரி நுவன் சல்காது தமக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நுவன் சல்காது சாட்சியை திரிவுப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தரவு மாற்றப்படாத குரல் பதிவை உடனடியாக ஆணைக்குழு முன் பிரசன்னப்படுத்துமாறு பெர்பச்சுவல் நிறுவனத்தின் பிரதான விற்பனை அதிகாரி நுவன் சல்காதுவிற்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய அவர் அவற்றை எடுத்து கொண்டு ஆணைக்குழுவிற்கு பிரவேசித்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.