கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினரும், மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினரும் மும்முரமாக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இக்குழுவினரது ஆய்வுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் காணப்படும் நீர்தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய போத்தல்கள் மற்றும் வீசியெறியப்படும் பாவனைப் பொருட்கள் ஆகியவற்றில் டெங்கு நுளம்புகள் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கிளிநொச்சி மாவட்ட மக்கள் தத்தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் நீர் தேங்கக்கூடிய பொருட்களை உடனடியாக சேமித்து அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு அகற்றுவதற்குத் தேவையான உதவிகளை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வழங்குவரென தெரிவித்துள்ளார்.
இதனை செய்யத்தவறும் பட்சத்தில் எதிர்வரும் மழைகாலத்தில் பாரிய டெங்கு அனர்த்தத்தினை கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.