தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மன்னார், சிலாவத்துறையிலுள்ள அரிப்பு பிரதேசத்தில் 700 குடும்பங்கள் பயன்பெறும் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதியை வழங்கிவைத்த பின்னர், அங்கு நேற்று (30) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
முசலி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் என்பது அரசியலை புரிந்துணர்வுடனும், தூரநோக்குடனும் கையாளக்கூடியவர்களின் கைககளில் போகவேண்டும். இந்த அதிகாரம் காட்டுதர்பார் அரசியல் செய்பவர்களின் கையில் போய்விட்டால், இன நல்லிணக்கதை இன்னும் சீர்குலைக்கும் நடவடிக்கையை செய்பவர்களாக நாங்கள் மாறிவிடுவோம். விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்ற, ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்துகொள்கின்றவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்கான தீவிர முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை மட்டத்தில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, சில முன்னெடுப்புகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பண்பாடு உள்ளுராட்சி மட்டத்திலும் விரிவாக்கப்படவேண்டும். இதற்கு பிரதேச மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
யுத்தத்தின் பின்னர் அடிப்படை வசதிகளுடன் கூடிய மீள்குடியேற்றத்திலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைளில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும். இப்பிரதேசம் மீனவ கிராமமாக இருக்கின்ற காரணத்தினால், மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் நடவடிக்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
சிலாவத்துறையில் ஒரு நகர அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும். அதனுடன் சேர்ந்து அருகிலுள்ள அல்லிராணிக் கோட்டையை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், அப்பிரதேசத்தை ஒரு சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் தொல்பொருளியில் திணைக்களம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுடன் பேசவுள்ளோம்.
முழு மன்னார் மாவட்டத்துக்கும் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை ஒரு நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கிறது. வியாயடிக்குளத்திலிருந்து நீரை சுத்திகரித்து முசலி பிரதேசத்துக்கு வழங்குவதற்கும், மாரி காலத்தில் மாத்திரம் நீர் செல்கின்ற கல்லாறு ஆற்றுக்கு குறுக்காக நீர்த்தேக்கம் அமைப்பதற்கும் இரண்டு மாற்று யோசனைகளையும் நாங்கள் தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம்.
மன்னார், வவுனியா, புத்தளம் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்தை நாங்கள் அண்மையில் எழுத்தூரில் பிரதமர் தலைமையில் ஆரம்பித்துவைத்தோம். அதன் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. வவுனியாவில் மல்வத்து ஓயாவுக்கு குறுக்காக நீர்த்தேக்கம் அமைத்து, மன்னார் மற்றும் வவுனியாவுக்கு நீர் வழங்கும் பாரிய நீர்வழங்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதுதவிர, பாவற்குளத்தில் நீரைப்பெற்று குடிநீர் வழங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
முல்லைத்தீவில் இன்று (31) புதிய குடிநீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். உலக வங்கியின் நிதியில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தை ஒரு வருடத்துக்குள் பூர்த்திசெய்வதற்கு தீர்மானித்துள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற நாங்கள், பாரபட்சமின்றி நாட்டிலுள்ள எல்லா மக்களும் பயனடையும் வகையில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வருகிறோம்.