அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கு தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் பிரஜையை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது நாட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக சந்தேகநபரை நாடு கடத்துமாறு அமெரிக்க அரசாங்கம் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனவே, அவரை நாடு கடத்த உத்தரவிடுமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின்னரே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.
அரச தரப்பின் வேண்டுகோள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த, சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது கட்சிக்காரருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் ஒரு சந்தேகநபரை நாடு கடத்த முடியாதென்று கூறிய அவர், அவரை விடுதலை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆதாரங்கள் நீதிமன்றம் முன் இருப்பதாக கூறிய நீதிபதி, அவரை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்டார்.
எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு ஒன்றை உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.