ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது – அமெரிக்கா

360 0

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின.

நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு படைகளிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது. அதன் பின்னர் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினர்.

இந்நிலையில், அங்கு சுமார் 8,400 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர் என கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்துவருவதால் அங்கு அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா அதிகரித்துள்ளது. தற்போது ஆப்கனில் 11 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இருந்த வீரர்கள் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் கூறினார்.

Leave a comment