ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்வு!

10280 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடுமையாக தாக்கிய ஹார்வே புயலுக்கு இதுவரை இந்திய மாணவர் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை கடந்த 26-ம் தேதி ஹார்வே என்ற புயல் தாக்கியது. இதனால் டெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக மக்கள் மழை வெள்ளத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆளில்லாத வீடுகளில் வாகனங்களை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித்துவிடப்பட்டுள்ளதால் குற்றசம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2005-ம் ஆண்டு தாக்கிய கத்ரினா புயலால் ஏற்பட்ட ஆழமான வடுக்களை தாங்கியுள்ள லூசியானாவில் 12 ஆண்டுகளுக்கு பின் ஹார்வே புயல் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. 15 முதல் 25 செ.மீ. அளவிற்கு மழை பெய்து வருகிறது.
இதனிடையே டெக்சாஸ்-லூசியானா எல்லைப்பகுதியில் இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்றது. ஹார்வே புயலின் தாக்கம் நேற்று நள்ளிரவு வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தென்கிழக்கு லூசியானா மற்றும் தெற்கு மிசிசிபி பகுதிகளில் இன்று வரை மழை நீடிக்கலாம் என நியூஓர்லியன்ஸ் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஹூஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஹார்வே புயல் பாதிப்பால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களில் இதுவரை ஒரு இந்திய மாணவர் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்வி புயல் தாக்கியதில் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான ஹூஸ்டனும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவரான நிகில்பாட்டியா மற்றும் மாணவி ஷாலினி சிங் ஆகியோர் பிராய்ன் ஏரியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவரும் சிக்கியுள்ளனர். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நிகில்பாட்டியா நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த நிகில்பாட்டியா ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அவருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி ஷாலினி சிங் டெல்லியை சேர்ந்தவர்.

Leave a comment